2020-2021 நிதியாண்டில் ஏற்பட உள்ள பொருளாதார பின்னடைவுக்கு பாஜக தான் காரணம் - ப. சிதம்பரம்

தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் காரணமாக பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முன்னாள் மத்திய நிதி மந்திரி ப.சிதம்பரம், மத்திய அரசின் பொருளாதார அணுகுமுறை குறித்து ‘டுவிட்டர்‘ பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் சாதனைகளை கேலி செய்தவர்கள், தங்களது அறியாமையையும், திறமையின்மையையும் பார்த்து பொருளாதார நிபுணர்கள் சிரிப்பதை தெரிந்து கொள்ள வேண்டும். 2015-ம் ஆண்டில் இருந்து தேசிய ஜனநாயக கூட்டணி அரசு என்ன செய்தது? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் தனது ட்விட்டர் பக்கத்தில், தொடர்ந்து 9 காலாண்டுகளாக பொருளாதார வீழ்ச்சிக்கும், 2020-2021 நிதியாண்டில் ஏற்பட உள்ள பொருளாதார பின்னடைவுக்கும் பாஜக அரசு தான் காரணமாக இருந்ததாக ப. சிதம்பரம் குற்றம் சாட்டியுள்ளார்.

2005-ம் ஆண்டுக்கும், 2015-ம் ஆண்டுக்கும் இடையே 27 கோடி இந்தியர்கள் வறுமையின் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டதாக ஆக்ஸ்போர்டு ஆய்வு கண்டறிந்துள்ளது. அந்த காலகட்டத்தில், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முதலாவது மற்றும் இரண்டாவது ஆட்சிகள் நடந்தன. அது, பொருளாதார வளர்ச்சியின் பொற்காலம் என ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.