கரோனா தொற்று மீண்டும் உயர்வு .. மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தல்

புதுடெல்லி: இந்தியாவில் கரோனா தொற்று மீண்டும் உயரத் தொடங்கியுள்ள நிலையில், மாநில அரசுகள் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் தினசரி கரோனா தொற்றுஎண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதனை அடுத்து நேற்று 1,300 பேருக்கு புதிதாக கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது. கடந்த 140 நாட்களில் இது அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். இந்த நிலையில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்ளத் தொடங்கியுள்ளது.

எனவே மாநில அரசுகளும் யூனியன் பிரதேசங்களும், கரோனா பரிசோதனை, கண்காணிப்பு, சிகிச்சை,கரோனா தடுப்பு பாதுகாப்பு நடைமுறைகள், தடுப்பூசி செலுத்தல் போன்ற 5 வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும், மருத்துவமனைகளில் போதிய படுக்கைகளும் மருத்துவப் பணியாளர்கள் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

இதனை அடுத்து நேற்றுமுன்தினம் இன்புளு யன்ஸா மற்றும் கரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மத்திய சுகாதாரத் துறை மாநிலங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுத்துள்ளது.

மேலும் தினசரி பாதிப்பு 1.46 சதவீதமாகவும், வாராந்திர பாதிப்பு 1.08 சதவீதமாகவும் உள்ளது. கரோனா தொற்றிலிருந்து குணமடைவோர் 98.79 சதவீதமாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 89,078 கரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. நாட்டில் இதுவரை 220.65 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.