துபாயில் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பஸ்சில் பயணம் செய்த பட்டத்து இளவரசர்

துபாயில் நடைபெற உள்ள எக்ஸ்போ 2020 உலக கண்காட்சியை முன்னிட்டு பல்வேறு உள்கட்டமைப்பு மற்றும் போக்குவரத்து பணிகள் கடந்த ஆண்டு முதல் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக உலக கண்காட்சிக்கு அதிக அளவில் வெளிநாட்டு பயணிகள் வருகை புரிய உள்ளதால் மெட்ரோ ரெயில் போக்குவரத்து, சாலைகள் விரிவாக்கம், சைக்கிள் பாதைகள், பஸ் போக்குவரத்து போன்றவை மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பஸ் போக்குவரத்தை மேம்படுத்த 17 பஸ் நிலையங்கள் மற்றும் நிறுத்தங்கள் மேம்படுத்தப்பட்டு 614 புதிய பஸ்கள் போக்குவரத்திற்கு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. துபாயில் அல் குபைபா என்ற பகுதியில் புதிதாக பெரிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வந்தது. தற்போது அதன் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளது. மொத்தம் 2 ஆயிரத்து 452 சதுர மீட்டர் பரப்பளவில் அலுவலக பகுதிகளுடன் கட்டப்பட்டுள்ளது. உள்ளே மொத்தம் 132 பஸ்களை நிறுத்திக்கொள்ள வசதி செய்து தரப்பட்டுள்ளது.

இந்த பேருந்து நிலையத்தில் கூடுதலாக வெளியில் இருந்து வரும் பஸ்களுக்காக 50 நிறுத்தங்கள், 48 கார் நிறுத்த பகுதிகள், 34 டாக்சிகளுக்கான கார் நிறுத்த பகுதிகள், 60 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் பகுதி, உணவகங்கள் என அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பேருந்து நிலையமானது சர்வதேச தரத்தில் மிக பிரமாண்டமாக, ஒரே நேரத்தில் 15 ஆயிரம் பயணிகள் பயன்படுத்தும் அளவு விசாலமாக கட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று துபாய் பட்டத்து இளவரசர் மேதகு ஷேக் ஹம்தான் பின் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் இந்த பேருந்து நிலையத்தை திறந்து வைத்து பார்வையிட்டார். பின்னர் அங்குள்ள பஸ் ஒன்றில் ஏறி அந்த பேருந்து நிலையத்தை சுற்றி வந்தார். அப்போது அந்த வளாகத்தில் பயணிகள் மற்றும் வர்த்தக ரீதியில் செய்யப்பட்டுள்ள வசதிகளை பார்வையிட்டார். இதுகுறித்து அவர் கூறுகையில், நிலையான, விதிவிலக்கான உள்கட்டமைப்பு திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலமாக உலக அளவில் முன் உதாரணமாக திகழ விரும்புகிறோம் என கூறினார்.