ஓரினச் சேர்க்கையாளர்கள் திருமணத்திற்கு மத்திய அரசு எதிர்ப்பு

டெல்லி: மத்திய அரசு எதிர்ப்பு... ஓரினச் சேர்க்கையாளர்களின் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள மத்திய அரசு, அனைத்து மதங்களும் ஆண் பெண் திருமணங்களையே அங்கீகரிப்பதாக உச்ச நீதிமன்றத்தில் கூறியுள்ளது.

சிறப்பு திருமணச் சட்டத்தின் கீழ் ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்கக் கோரி நாடு முழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இந்த விசாரணை கடந்த மாதம் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், பி.எஸ்.நரசிம்மா, ஹிமா கோலி, எஸ்.ரவீந்திர பட் அமர்வு இன்று விசாரணைக்கு வருகிறது. ஆனால், இந்த வழக்குகளை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஓரினச்சேர்க்கை திருமணத்தை அங்கீகரிக்க சட்டத்தின் ஒரு பிரிவை மாற்றி எழுத வேண்டும் என்று மத்திய அரசின் மனுவில் கூறப்பட்டுள்ளது.

பல்வேறு தரப்பினரும் தொடர்ந்துள்ள வழக்குகளில் நீதிமன்றம் ஒரே தீர்ப்பை வழங்க கூடாது என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

திருமணச் சட்டத்தில் மாற்றங்களை நாடாளுமன்றம் மூலமாகச் செய்ய வேண்டும் என்றும், சட்ட மன்றங்கள் மாற்ற உத்தரவிட முடியாது என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கை தொடர்பவர்கள் ஒட்டுமொத்த சமுதாயத்தின் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை என்றும், நகர்ப்புறங்களில் உள்ள மேல்தட்டு மக்களின் கருத்துகளை பிரதிபலிக்கின்றனர் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

திருமண பந்தங்கள், நாட்டின் சமுதாய அமைப்பில் வேரூன்றி உள்ளதாகவும், அனைத்து மதங்களிலும், புனிதமாக கருதப்படுவதாகவும் கூறியுள்ள மத்திய அரசு, ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே நடைபெறும் திருமணத்தையே அனைத்து மதங்களும் அங்கிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளது.