இந்திய பொருளாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் அறிகுறிகள் தென்படுகிறது - ரிசர்வ் வங்கி கவர்னர்

உலகம் முழுவதும் தற்போது கொரோனா வைரஸ் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் காரணமாக, சர்வதேச பொருளாதாரமும் சீரழிந்து வருகிறது. இந்திய பொருளாதாரமும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 3 மாதங்களுக்கும் மேலாக அமல்படுத்தப்பட்டு உள்ள ஊரடங்கால் உற்பத்தித்துறை போன்ற அனைத்து துறைகளும் முடங்கி உள்ளதால் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது. தற்போது ஊரடங்கு நடவடிக்கைகளில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் பொருளாதாரத்தில் நேர்மறையான தாக்கங்கள் ஏற்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஸ்டேட் வங்கியின் 7-வது பொருளாதார மாநாட்டில் பேசிய சக்திகாந்த தாஸ், நாட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தொடர் ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளால் இந்திய பொருளாதாரம் இயல்புநிலைக்கு திரும்புவதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், தற்போது நம்பிக்கை, நிதி நிலைத்தன்மையை பாதுகாத்தல், வளர்ச்சியை புதுப்பித்தல் போன்றவற்றை மீண்டும் ஏற்படுத்துவதும், வலுவாக மீண்டு வருவதும் இப்போதைய தேவை ஆகும். சாத்தியமான வளர்ச்சியில் இந்த தொற்றுநோய் காலகட்டம் எத்தகைய நீடித்த விளைவுகளை இட்டுச்செல்லும் என்பதெல்லாம் இதுவரை தெரியவில்லை என்று கூறினார்.