கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கியது

சீனாவில் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதன் முதலாக கொரோனா வைரஸ் தோன்றியது. தற்போது இந்த கொரோனா வைரஸ் உலகின் 200க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இந்தியாவிலும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

தற்போது கர்நாடகத்தில் கொரோனா வைரஸ் பரவுவது மேலும் அதிகரித்துள்ளது. கர்நாடகத்தின் தலைநகரான பெங்களூருவில் கொரோனா வைரஸ் கோரத் தாண்டவமாடி வருகிறது. கொரோனா பரவலை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்தாலும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டு தான் செல்கிறது.

கர்நாடகத்தில் ஏற்கனவே 63 ஆயிரத்து 772 பேர் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி இருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் புதிதாக 3,648 பேர் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால் அங்கு கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 67 ஆயிரத்து 420 ஆக உயர்ந்துள்ளது. நேற்று மட்டும் 730 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதால், கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரத்து 795 ஆக உள்ளது.

கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் 72 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி உள்ளனர். இதில் 31 பேர் மட்டும் பெங்களூருவை சேர்ந்தவர்கள் ஆவர். கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 70 ஆயிரத்தை நெருங்கி உள்ளது. பெங்களூருவில் மட்டும் 33 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.