அதிபர் டிரம்ப் வாயை மூடிக் கொள்ள கூறிய போலீஸ் அதிகாரி

அதிபர் ட்ரம்பின் சர்ச்சை பேச்சால் டென்ஷனான போலீஸ் அதிகாரி ஒருவர் கோபமடைந்து வாயை மூடுமாறு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் மினசொட்டா மாகாணத்தில் ஜோர்ஜ் புளோயிட் என்ற கறுப்பினத்தவரை அம்மாகாண போலீசார் வன்முறையாக நடத்தியதால் அவர் இறந்தார். போலீசாரின் இந்த செயலை கண்டித்து மினசோட்டாவில் போராட்டம் வெடித்தது. அதை தொடர்ந்து நியூயோர்க், லொஸ் ஏஞ்சல்ஸ், டெல்லாஸ் என அமெரிக்காவின் பல மாகாணங்களிலும் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அதிபர் ட்ரம்ப் ஆளுநர்களை சாடியுள்ளார். கலவரத்தை அவர்கள் கட்டுப்படுத்த தவறியதாகவும், கலவரத்தை கட்டுப்படுத்த தவறினால் இராணுவத்தை கூட களம் இறக்குவேன். இது ஆதிக்கம் செலுத்த வேண்டிய நேரம் என தெரிவித்தார்.

ட்ரம்பின் இந்த பேச்சுக்கு போலீஸ் அதிகாரி ஒருவர் ட்ரம்பை கடுமையாக சாடியுள்ளார். அவர் கூறியதாவது:

அதிபரால் ஆக்கப்பூர்வமாக ஏதும் செய்ய இயலவில்லை என்றால் வாயை மூடிக்கொண்டு இருங்கள். இது ஆதிக்கம் செலுத்தும் நேரமில்லை. இந்த நேரத்தில் பலத்தை காட்டுவது தலைமைக்கு அழகல்ல. இது ஹொலிவுட் படம் அல்ல. நிஜ வாழ்க்கை என கடுமையாக பேசியுள்ளார்.