முதலமைச்சர் திறனாய்வு தேர்வு முடிவுகள் டிசம்பர் 1ஆம் தேதி வெளியிடப்படும்

சென்னை: தமிழக பள்ளி மாணவர்கள் உயர்கல்வி பயில்வதை ஊக்கப்படுத்தும் நோக்கில் பள்ளி கல்வித்துறை சார்பில் முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடப்பு ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.

அந்த வகையில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் 11ம் வகுப்பு பயிலும் மாணவர்கள் இந்த தேர்வினை எழுத விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதன்படி ஏராளமானோர் இந்த திட்டத்தின் கீழ் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். இவர்களுக்கான தேர்வு கடந்த அக்டோபர் 7ம் தேதி நடத்தப்பட்டது.


இதையடுத்து இந்த தேர்வின் முடிவுகள் வருகிற டிசம்பர் 1ஆம் தேதி www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை தகவல் தெரிவித்துள்ளது. எனவே மாணவர்கள் தங்களது பதிவு மற்றும் பிறந்த தேதியினை உள்ளிட்டு தங்களது முடிவுகளை காணலாம்.

இந்த தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் ரூ. 1000 மாணவர் இளங்கலை பட்ட படிப்பை முடிக்கும் வரை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.