யாசகம் பெறுவோர் வருகையால் கொரோனா அதிகரிக்கும் அபாயம்

வவுனியாவில் வெளிமாவட்ட யாசகம் பெறுவோரின் வருகையால் கொரோனா நோய் தொற்று அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா நகர்ப்பகுதியில் யாசகம் பெற்று வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. வெளி மாவட்டங்களில் இருந்து கைக்குழந்தைகளுடன் அதிகளவான யாசகம் பெறுவோரின் குடும்பங்கள் வருகை தந்து இருப்பதை அவதானிக்க முடிகிறது.

வவுனியா பழைய பேருந்து நிலையம், மற்றும் நகர் பகுதிகளில் சில இடங்களிலும், குடியிருப்பு குளத்தின் ஓரங்களிலும் குடும்ப சகிதமாக வருகை தந்து எந்தவிதமான சுகாதார நடைமுறைகளையும் கடைப் பிடிக்காமல் தங்கி உள்ளனர். இதன் காரணத்தினால் வெளி மாவட்டங்களில் இருந்து கொரோனா வைரஸ்ஸின் காவிகளாக இவர்கள் செயற்படக் கூடிய சந்தர்ப்பம் அதிகமாக உள்ளது.

இதேவேளை ஆண், பெண், வித்தியாசமின்றி மது,அருந்துதல், தகாத வார்த்தைகள் பேசுதல், சண்டை போடுதல் போன்ற விரும்பத்தகாத செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த விடயம் தொடர்பில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.