விமானத்தில் கொரோனா பரவும் ஆபத்து மிகவும் குறைவு

ஆபத்து மிகவும் குறைவு... விமானத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான சாத்தியம் உள்ளது என்றாலும், பரவுவதற்கான ஆபத்து மிகவும் குறைவு என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

அறைகள், அரங்குகள் போன்ற மூடுண்ட பகுதிகளில், கொரோனா நோயாளி இருமினாலோ தும்மினாலோ அல்லது சுவாசத்தின் மூலம் வைரஸ் வெளிப்பட்டாலோ, காற்றில் உள்ள நீர்த்திவலைகளில் சேர்ந்து, பிறருக்கு பரவக்கூடிய ஆபத்து அதிகம். அதுபோல, விமானத்தில் பயணிக்கும்போது கொரோனா வைரஸ் பரவக்கூடுமா என்றும் ஆய்வுகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், மார்ச் 9ஆம் தேதி டெல் அவிவ் நகரில் இருந்து ஃபிராங்பர்ட் சென்ற விமானத்தில் 102 பேர் பயணித்துள்ளனர். இதில் 7 கொரோனா நோயாளிகள் இருந்துள்ளனர். அதில் 4 பேர் அறிகுறிகளுடன் இருந்துள்ளனர்.

விமானத்தில் பயணித்த யாரும் மாஸ்க் அணிந்திருக்கவில்லை. இந்த விமானத்தில் பயணித்தவர்களை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டதில் 2 பேருக்கு கொரோனா தொற்றியிருப்பதை கண்டறிந்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

விமானத்திற்குள், சீரான இடைவெளியில் புதுப்பிக்கப்படும் காற்றோட்டத்தின் காரணமாக, பரவும் ஆபத்து குறைந்திருக்கலாம் என்றும், பயணிகள் மாஸ்க் அணிந்திருந்தால் அது மேலும் குறையும் என்றும் ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.