கருணாநிதி நினைவுநாளில் அழகிரி வராததன் காரணம் இதுதானாம்!!!

சென்னை: அறுவை சிகிச்சையால் வரவில்லை... முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளுக்கு, அவரது மகன் அழகிரி அஞ்சலி செலுத்த வராதது ஏன் என்பது குறித்து, தி.மு.க., மூத்த நிர்வாகிகள் சிலர் விசாரித்துள்ளனர்.

இது குறித்து, அழகிரி ஆதரவாளர்கள் கூறியதாவது: ஆக., 7ல் கருணாநிதி நினைவு நாள். ஆண்டுதோறும் இந்நாளில் சென்னை வந்து, அவரது நினைவிடத்துக்கு சென்று மரியாதை செலுத்துவதை, அழகிரி வாடிக்கையாக வைத்திருந்தார். ஆனால், இந்த ஆண்டு அவரால் வர முடியவில்லை.அவரது காலில் ஏற்பட்டிருக்கும் காயத்திற்கு, சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டதே காரணம். அவர் ஓய்வில் இருக்க வேண்டும் என, மருத்துவர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

சகோதரர் அழகிரியை சந்தித்து உடல் நலம் விசாரிக்க, முதல்வர் ஸ்டாலின் விருப்பப்பட்டு உள்ளார். ஆனால், இதை முதல்வரின் நெருங்கிய வட்டாரத்தில் உள்ள சிலர் விரும்பவில்லை. அதனால், சகோதரர் சந்திப்பை ஸ்டாலின் தள்ளி போட்டு விட்டார்.

இருந்தபோதும், தன் சார்பில் குடும்ப உறுப்பினர் ஒருவரை அனுப்பி, அழகிரியிடம் நலம் விசாரிக்க செய்துள்ளார். அரசு நிகழ்ச்சிகளுக்காக மதுரைக்கு செல்லும்போது, அழகிரி வீட்டுக்கு வந்து, ஸ்டாலின் நலம் விசாரிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.