கோத்தகிரி அருகே யானைகளை புகைப்படம் எடுக்க முயற்சி... விரட்டியடித்ததால் ஓட்டம் பிடித்த சுற்றுலாப்பயணிகள்

நீலகிரி: சுற்றுலாப்பயணிகளை துரத்திய யானைகள்... நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே சாலையை கடக்க முயன்ற யானைகளை புகைப்படம் எடுக்க முயன்ற சுற்றுலா பயணிகளை யானைகள் விரட்டியதால் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

மேற்கு தொடர்ச்சி மலைகளில் அமைந்துள்ள நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளது. இம்மாவட்டம் உயிர்க்கோள காப்பகங்களில் ஒன்றாக உள்ளது. அதேபோல இம்மாவட்டத்தில் உள்ள வனப்பகுதிகள் வனவிலங்குகள் உள்ளிட்ட பல்லுயிர்களின் புகலிடமாகவும் விளங்கி வருகிறது. குறிப்பாக காட்டு யானைகள், புலிகள், மான்கள், கரடிகள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் வசித்து வருகின்றன.

இந்நிலையில் இப்பகுதியில் உள்ள காட்டு யானை உள்ளிட்ட வன விலங்குகள் அவ்வப்போது உணவு மற்றும் தண்ணீர் தேடி வனப்பகுதியை ஓட்டியுள்ள கிராமங்களுக்குள் செல்வது வழக்கம். சுற்றுலா தலமாக உள்ள நீலகிரி மாவட்டத்திற்கு தொடர் விடுமுறை காரணமாக ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள குஞ்சப்பனை பகுதியில் ஒரு யானைக் கூட்டம் கடந்த சில நாட்களாக உலா வருகிறது.

இரண்டு குட்டிகளுடன் சுற்றி வரும் மூன்று காட்டு யானைகள் உணவு தேடி வனப்பகுதி மற்றும் தேயிலை தோட்டங்களுக்குள் சென்று வருகின்றன. இதற்காக அடிக்கடி சாலைகளை கடந்து யானைக்கூட்டம் சென்று வருகிறது.


இந்நிலையில் இன்று தேயிலை தோட்டத்திற்குள் இருந்து இறங்கிய அந்த யானைக்கூட்டம் கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையை கடந்து சென்றுள்ளது. அப்போது யானைகள் வருவதைப் பார்த்த சுற்றுலா பயணிகள் வாகனத்தை நிறுத்தி வேடிக்கை பார்த்துள்ளனர்.


சிலர் ஆபத்தை உணராமல் யானைகளுடன் புகைப்படம் எடுக்க முயற்சி செய்துள்ளனர். அப்போது குட்டியுடன் இருந்த யானைகள் சுற்றுலா பயணிகளை விரட்டியுள்ளது. இதனால் அச்சம் அடைந்த சுற்றுலா பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். பின்னர் யானைகள் எந்த தொந்தரவும் செய்யாமல் அமைதியாக சாலையை கடந்து சென்றன. சுற்றுலா பயணிகள் படம் பிடித்த இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.