ஒன்பது மாதங்களுக்கு பிறகு திறக்கப்பட்ட வேலூர் கோட்டை; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

வேலூர் மாநகரின் முக்கிய சுற்றுலா மையமாக விளங்கும் வேலூர் கோட்டை ஒன்பது மாதங்களுக்கு பிறகு நேற்று முன்தினம் திறக்கப்பட்டது. இதனால் பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். நேற்றும் பல சுற்றுலா பயணிகள் ஆர்வமாக சென்று வேலூர் கோட்டையை பார்வையிட்டனர். இதில் ஏராளமான வடமாநிலத்தவர்களும் அடங்குவார்கள்.

காலை மற்றும் மாலை வேளைகளில் பலர் நடைபயிற்சியும் மேற்கொண்டனர். இதனால் வேலூர் கோட்டை மீண்டும் மக்கள் நடமாட்டத்துடன் இயல்பு நிலைக்கு திரும்பியது. தொல்லியத்துறை சார்பில் கோட்டைக்கு வருபவர்களின் விவரம் பதிவு செய்து பின்னர் உள்ளே அனுமதிக்கின்றனர்.

அதன்படி நேற்று முன்தினம் வேலூர் கோட்டை திறக்கப்பட்ட முதல்நாளிலேயே 3,326 சுற்றுலா பயணிகள் வந்து பார்வையிட்டுள்ளனர். இவர்களின் விவரம் தொல்லியல்துறை உத்தரவின் பேரில் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. இதுகுறித்து கோட்டை கண்காணிப்பு அதிகாரிகள் கூறுகையில், வேலூர் கோட்டைக்கு எவ்வளவு பயணிகள் வருகிறார்கள் என்ற புள்ளி விவரம் தொல்லியல் துறைக்கு அனுப்பப்படுகிறது.

இந்த புள்ளி விவரத்தின் அடிப்படையில் வருங்காலங்களில் வேலூர் கோட்டைக்கு தேவைப்படும் வசதிகள் மேற்கொள்ளப்படும் என்றனர். கோட்டை பூங்காவும் தற்போது திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் குடும்பம், குடும்பமாக வந்து பொழுது போக்குகின்றனர். காதல் ஜோடிகளும் வரத்தொடங்கியுள்ளனர். இதனால் வேலூர் கோட்டை மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பியது.