மரடோனா கல்லறையில் பீலே அஞ்சலி செலுத்தியதாக வைரலாகும் புகைப்படம்

கால்பந்து விளையாட்டு வீரர்களில் உலக புகழ் பெற்ற டீகோ மரடோனா, நவம்பர் 25 ஆம் தேதி மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அதன் பின் நவம்பர் 26 ஆம் தேதி இவரது இறுதி ஊர்வலம் நடைபெற்றது. இருப்பினும், இறுதி சடங்குகளில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

மரடோனா மறைவிற்கு கால்பந்து விளையாட்டு பிரபலங்கள், உலக நாடுகளை சேர்ந்த அரசியல் தலைவர்கள், கால்பந்து ரசிகர்கள் இரங்கல் தெரிவித்தனர். மரடோனா ரசிகர்கள் அவரது மறைவை ஏற்க முடியாமல் துக்கத்தில் ஆழ்ந்துள்ளனர். இந்நிலையில் மரடோனா அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில் பிரேசில் நாட்டு கால்பந்து விளையாட்டு வீரரான பீலே அஞ்சலி செலுத்தியதாக கூறி புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மரடோனாவுக்கு பீலே அஞ்சலி செலுத்துகிறார். இது மிகவும் வலிக்கிறது எனும் தலைப்பில் அந்த வைரல் புகைப்படம் பகிரப்பட்டு உள்ளது. தற்போது இந்த வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அது போட்டோஷாப் மூலம் மாற்றப்பட்டது என கண்டறியப்பட்டு உள்ளது. உண்மையில் பீலே மரடோனா கல்லறையில் அஞ்சலி செலுத்தி இருப்பின், அது பல ஊடகங்களில் செய்தியாக வெளியாகி இருக்கும். எனினும், அவ்வாறு எதுவும் வெளியாகவில்லை.

அதன்படி, பிரேசில் கால்பந்து விளையாட்டு வீரர் பீலே மறைந்த மரடோனாவின் கல்லறைக்கு சென்று அஞ்சலி செலுத்தியாக வைரலாகும் புகைப்படம் விஷமிகளில் உருவாக்கப்பட்டது என உறுதியாகிறது. போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. எனவே போலி செய்திகளை பரப்பாதீர்கள்.