பருவமழை காரணமாக சாத்தனூர் அணையின் நீர்மட்டம் உயர்வு

பருவமழை காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணை 119 அடி உயரம் கொண்டது. இதன் மொத்த கொள்ளளவு 7321 மில்லியன் கன அடி ஆகும். இந்த அணையின் மூலம் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 50 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

கடந்த 2 ஆண்டுகளாக மழை பொய்த்து விட்டதால் விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் தற்போது பெய்து வரும் பருவமழை காரணமாக சாத்தனூர் அணையின் நீர்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இதுபோல 52 அடி உயரம் கொண்ட கிருஷ்ணகிரி அணையில் 49.2 அடி தண்ணீர் தேக்கி வைக்கப்பட்டு மீதமுள்ள 1,300 கனஅடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு உபரிநீர் வெளியேற்றப்படுவதால் தென்பெண்ணையாற்றில நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக சாத்தனூர் அணைக்கு தற்போது வினாடிக்கு 1,215 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் மளமளவென உயர்ந்து வருகிறது. கடந்த 22-ந்தேதி 79 அடியாக இருந்த சாத்தனூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 82.20 அடியாக உயர்ந்துள்ளது. அதாவது ஒரே வாரத்தில் 3 அடி உயர்ந்துள்ளது.