பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம் - பேஸ்புக் நிறுவனம் விளக்கம்

சமூக வலைதளங்களில் ஒன்றான பேஸ்புக், அதிகளவில் பயன்படுத்தப்படும் ஒன்றாகும். சமூக வலைதளங்களில் வெறுப்பு பேச்சுகள் மற்றும் வன்முறை தூண்டலாக பதிவுகள் தற்போது அதிகளவில் பகிரப்படுகின்றன. கருத்து சுதந்திரம் உள்ள நாடுகளில் இவை அதிகமாக செய்யப்படுகின்றன. குறிப்பாக இந்தியாவில் வெளிப்படையாகவே கருத்துக்கள் பகிரப்படுகின்றன.

இந்நிலையில் இந்தியாவில் வர்த்தக காரணங்களுக்காக, பா.ஜனதாவினரின் வெறுப்பு பேச்சுகள் மீது நடவடிக்கை எடுக்க பேஸ்புக் நிறுவனம் மறுத்து வருவதாக அமெரிக்க பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுயுள்ளது. இதனை சுட்டிக்காட்டி பேஸ்புக் தளம் மீது காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. ஆனால் இதனை பேஸ்புக் நிறுவனம் மறுத்துள்ளது.

இது குறித்து பேஸ்புக் நிறுவனம் விளக்கம் அளிக்கையில், எப்போதும் பாகுபாடு காட்டாமல் வெளிப்படையாக நாங்கள் இயங்கி வருகிறோம். பேஸ்புக்கில் யார் வேண்டுமானாலும் தங்கள் கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்த முடியும். எந்தவகையிலும் பேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்கமாட்டோம் என்று தெரிவித்துள்ளது.

தங்களது கொள்கைகளில் ஒரு சார்புடன் பேஸ்புக் நடந்துகொள்வதாக புகார் எழுந்ததன் காரணமாக பேஸ்புக் நிறுவனம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது. மேலும், பேஸ்புக்கில் வெறுப்பு மேலோங்குவதை ஏற்கமாட்டோம் என பேஸ்புக் நிறுவனம் உறுதியளித்துள்ளது.