ஸ்காட்லாந்து முழுவதும் கடைகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமானது

முகக்கவசம் அணிவது கட்டாயம்... ஸ்காட்லாந்து முழுவதும் உள்ள கடைகளில், தற்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சில மருத்துவ நிலைமைகள் அல்லது குறைபாடுகள் உள்ளவர்களுக்கும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப்படும். பேருந்துகள், ரயில்கள், டிராம்கள், விமானங்கள் மற்றும் வாடகை கார்கள் உள்ளிட்ட பொது போக்குவரத்தில் முகக்கவசம் அணிவது ஏற்கனவே கட்டாயமாக உள்ளது.

முகக்கவசம் அணிவது கொரோனா வைரஸ் பரவுவதற்கான அபாயத்தைக் குறைக்க கூடுதல் பாதுகாப்பை வழங்கும் என்று நம்புவதாக ஸ்கொட்லாந்து அரசாங்கம் கூறியுள்ளது. ஆனால், முகக்கவசம் அணிவது வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கான பிற நடவடிக்கைகளுக்கு, அதாவது உடல் ரீதியான தூரம் மற்றும் கை கழுவுதல் போன்றவைக்கு மாற்றாக இல்லை.

மார்ச் மாதத்திற்குப் பிறகு முதல்முறையாக, ஸ்கொட்லாந்தில் உள்ளவர்கள் இப்போது வேறொரு நபரின் வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த கட்டத்தில், அதிகபட்சம் மூன்று வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்த எட்டு பேர் வீட்டுக்குள் சந்திக்க முடியும்.

இதனிடையே, எந்தவொரு நாளிலும் நான்கு வெவ்வேறு வீடுகளைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க வேண்டாம் என்று பெரியவர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. பெரியவர்கள் வெவ்வேறு வீடுகளுக்கு இடையில் உடல் ரீதியான தூரத்தை பராமரிக்கும் வரை, ஒரே இரவில் தங்க அனுமதிக்கப்படுகிறது.