போராட்டம் நடத்தி வருகிற விவசாயிகளுடன் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேச்சு

மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து டெல்லியின் எல்லைகளை முற்றுகையிட்டு ஆயிரக்கணக்கான விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஏற்கனவே 5 சுற்று பேச்சுவார்த்தையில் எந்த சமரசமும் ஏற்படாத நிலையில், புதிய பேச்சுவார்த்தைக்கு மத்திய அரசு, விவசாயிகள் அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்துள்ளது.

வேளாண் சட்டங்களை திரும்பப்பெற வலியுறுத்தி டெல்லியில் தொடர் போராட்டம் நடத்தி வருகிற விவசாயிகளுடன் மேற்கு வங்காள மாநில முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் கட்சித்தலைவருமான மம்தா பானர்ஜி தொலைபேசி வழியாக பேசினார்.

அப்போது அவருடன் உரையாடிய விவசாயிகள், நீங்கள் வந்து எங்கள் தர்ணா போராட்டத்தில் சேருங்கள். அது எங்களுக்கு இன்னும் வலிமையைத்தரும் என வேண்டுகோள் விடுத்தனர். அதற்கு மம்தா, விவசாயிகளுடைய கோரிக்கையை எங்கள் கட்சி ஆதரிக்கிறது என உறுதி அளித்தார்.

அவரது கட்சி எம்.பி.க்கள் டெரிக் ஓ பிரையன், சதாப்தி ராய், பிரசுன் பானர்ஜி, பிரதிமா மொண்டல், முகமது நதிமுல் ஹக் ஆகியோர், டெல்லியில் போராடும் விவசாயிகளை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர்.