லடாக் எல்லையில் இந்திய-சீன வீரர்கள் மோதலுக்கான காரணங்கள் என்ன ?

லடாக் எல்லையான கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த 15 ஆம் தேதி இரவு இந்திய-சீன ராணுவ வீரர்களிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இதனால் எல்லையில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. சீனா தரப்பில் 39 வீரர்கள் மரணம் மற்றும் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த மோதல் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே போர் ஏற்படும் சூழல் நிலவி வருகிறது. தற்போது, லடாக் எல்லையில் சீன வீரர்கள் அத்துமீறி இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவை, இந்திய-சீன எல்லைகள் முழுமையாக வரையறுக்கப்படாமல், பல ஆண்டுகளாக எல்லையில் பெரிய அளவில் உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்ததால் மோதல் ஏற்பட்டுள்ளது.

எல்லையில் இந்தியா கட்டமைப்புகளை அதிகரிப்பதை சீனா அச்சுறுத்தலாகவே கருதி வந்ததால், சீனா இந்தியாவிடம் பலமுறை தனது அதிருப்தியை தெரிவித்திருந்தது. ஜம்மு-காஷ்மீர் மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டாக பிரிக்கப்பட்டு மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டதால் பாகிஸ்தானும், சீனாவும் தொடர்ந்து தங்களது எதிர்ப்பை தெரிவித்தன.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் தொடர்பான தகவல்களை சீனா மறைத்ததால் சீனா மீது உலக நாடுகள் பெரும் கோபத்தில் உள்ளன. இதனால் உலக நாடுகளின் பார்வையில் இருந்து தப்பிக்க, சீனா இந்தியாவை சீண்டி போர் என்ற கருத்துக்களை உலக அளவில் பேசுபொருளாக மாற்றியுள்ளது. மேலும், அமெரிக்கா இந்தியாவுடன் நெருக்கத்தை ஏற்படுத்த தென்சீன கடற்பரப்பில் சீனாவின் ஆதிக்கத்தை குறைக்க திட்டமிட்டிருப்பது, சீனாவுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற காரணங்களால் சீனா, இந்தியா மீது தாக்குதலை ஏற்படுத்தியுள்ளது.