‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார்? - மத்திய அரசு விளக்கம்

கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் ‘ஆரோக்கிய சேது’ என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. இதை ஸ்மார்ட்போனில் பதிவிறக்கம் செய்பவர்கள் தங்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்று தெரிந்து கொள்ளலாம். இதை பதிவேற்றம் செய்த மற்றொரு நபரை கடந்து செல்லும்போது, அவருக்கு கொரோனா இருக்கும் பட்சத்தில் அதை அறிய முடியும்.

இந்த செயலியால், தனிநபர்களின் தரவுகள் திருடப்படும் ஆபத்து உள்ளதாகவும் ஒருசாரார் கூறுகிறார்கள். சவுரவ் தாஸ் என்பவர், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்திடம் கேள்விகள் கேட்டு ஒரு மனு அனுப்பி இருந்தார். அதில், ‘ஆரோக்கிய சேது’ செயலியை உருவாக்கியது யார்? எந்த சட்டத்தின்கீழ் அது இயங்குகிறது? என கேள்வி எழுப்பியிருந்தார். ஆனால், அந்த அமைச்சகம் எந்த தகவலும் அளிக்கவில்லை. தேசிய தகவல் மையமும் தகவல் அளிக்கவில்லை.

அதன்பின், தகவல் அறியும் உரிமை சட்டப்படி, மத்திய தகவல் ஆணையத்தில் சவுரவ் தாஸ் புகார் அளித்தார். பின்னர் தகவல் ஆணையர் வனஜா என்.சர்னா, தேசிய தகவல் மையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார். மேலும், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக துணை இயக்குனர்கள் 2 பேருக்கும் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். ஆணையத்தின் விசாரணைக்கு நேரில் ஆஜராகுமாறு கூறியுள்ளார்.

மேலும் அவர், ஆரோக்கிய சேது இணையதளத்தில், அதை தேசிய தகவல் மையம், மத்திய மின்னணு அமைச்சகம் ஆகியவை வடிவமைத்து, பராமரித்து, இயக்கி வருவதாக கூறப்பட்டுள்ளது. அப்படி இருக்கும்போது, தங்களிடம் தகவல் இல்லை என்று எப்படி மறுக்க முடியும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.