Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • வேண்டுதலை நிறைவேற்றும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

வேண்டுதலை நிறைவேற்றும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

By: Nagaraj Sun, 13 Sept 2020 11:21:31 AM

வேண்டுதலை நிறைவேற்றும் தஞ்சை புன்னைநல்லூர் மாரியம்மன்

தஞ்சாவூரிலிருந்து கிழக்கே 5 கிமீ. தொலைவில் நாகப்பட்டினம் சாலையில் பிரம்மாண்டமாக அமைந்துள்ளது புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில். தஞ்சையை ஆண்ட வெங்கோஜி மகாராஜா 1680-ல் இந்த கோவிலை அமைத்து, ‘புன்னை நல்லூர்’ என்று பெயரிட்டார்.

மறுபடியும் துளஜா ராஜாவும் திருச்சுற்று மாளிகையையும் அமைத்தான். ஒவ்வொரு வருடமும் கோடை நாட்களில் அம்பாளுக்கு முகத்திலும் , சிரசிலும் முத்து முத்தாக வியர்வை வியர்த்துத் தானாகவே மாறி விடும் வழக்கம் தற்போது வரை உள்ளது. இதன் காரணமாகவே, இந்த அன்னையை ‘முத்து மாரியம்மன்’ என்று அழைக்கிறார்கள்.

குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு வைசூரி (அம்மை நோய்) வார்க்கும் நேரத்தில் அம்பாளுக்கு பிரார்த்தனை செய்தால், குணம் அடைவதும், தீராத வயிற்றுவலி உள்ளவர்கள் இந்த மகமாயிக்கு வேண்டிக்கொண்டு வயிற்றில் மாவிளக்குப் போடுவதும், கண் பார்வை தெரிய கண்ணடக்கம் செய்வதும், உப்புக்கல் வாரி இறைப்பதும், கோழி நேர்ந்துவிடுவதுமாக பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி வருகிறார்கள்.

tanjore,mariamman,headgear abhishekam,yogurt ,தஞ்சை, மாரியம்மன், தலைக்காப்பு அபிஷேகம், தயிர்ப்பள்ளயம்

திருக்கோவிலின் உட்புறத்தில், வெல்லக் குளம் உள்ளது. உடம்பில் கட்டி மற்றும் பரு ஏற்படுபவர்கள் அம்மனை வேண்டிக்கொண்டு வெல்லம் வாங்கி வந்து வெல்லக் குளத்தில் இடுவர். வெல்லம் தண்ணீரில் கரைவதுபோல் அவை கரைந்துவிடும் என்கிறார்கள்.

மாரியம்மனுக்கு ஆடி மாதத்தில் முத்துப் பல்லக்கும், ஆவணியில் தேர்த் திருவிழாவும், புரட்டாசியில் தெப்பத் திருவிழாவும் சிறப்பாக நடைபெறும். உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாகச் செலுத்திய தங்கத்தில் சுமார் 22 கிலோவுக்கு கவசம் செய்து அம்மனுக்கு அளிக்கப்பட்டது. இது தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்தைச் சேர்ந்த 88 திருக்கோவில்களுள் ஒன்றாகும்.

சோழப் பேரரசர்கள் தஞ்சையைச் சுற்றிலும் எட்டுத் திக்கிலும் அஷ்ட சக்திகளை காவல் தெய்வங்களாக அமைத்தார்கள். அவ்வாறு தஞ்சைக்கு கீழ்ப் புறத்தில் அமையப் பெற்ற சக்தியே புன்னைநல்லூர் மாரியம்மன் என்பதாகும். அம்பாளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு மண்டலம் (48 நாட்கள்)’ தலைக் காப்பு’ அபிஷேகம் நடைபெறும்.

தல-அபிஷேகம்-தலைக்காப்பின்போது அம்பாளுக்கு வெப்பம் அதிகமாகும். அதைத் தணிக்க அம்பாளுக்கு தயிர்ப் பள்ளயம் , இளநீர் வைத்து நைவேத்தியம் நடைபெறும். உள்தொட்டி, வெளித் தொட்டி இரண்டிலும் நீர் நிரப்பி அம்பாளின் வெப்பம் தணிக்கப்படும்.

Tags :