Advertisement

  • வீடு
  • ஆன்மீகம்
  • பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

By: Nagaraj Tue, 03 Nov 2020 5:07:59 PM

பக்தர்களின் வேண்டுதலை நிறைவேற்றும் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள்

'திருவல்லிக்கேணி' என்ற பெயர் மருவி அழைக்கப்பட்டு வருகிறது. இங்குள்ள குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால் 'திரு அல்லிக் கேணி' என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி 'திருவல்லிக்கேணி' என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.

இந்த உலகத்தில் பிறக்கும் ஒவ்வொரு மனிதர்களுக்கும், அவர்களின் வாழ்க்கையில் செய்வதற்கு உரிய கடமைகள் கையளிக்கப்படுகின்றன. சிலர் அதனை கச்சிதமாக செய்து முடிக்கிறார்கள். பலரும் அதில் இருந்து விலகி, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வாழ்ந்தோம், இறந்தோம் என்று போய்விடுகிறார்கள்.

ஆனால் நமக்கு அளிக்கப்பட்ட கடமைகளில் இருந்து எந்த பக்கமும் விலகாமல் நின்று, கடமையாற்றுவதே இறைவனுக்கு நாம் செய்யும் நன்றிக்கடன் ஆகும்.

அப்படித்தான் மகாபாரதம் நடைபெற்ற காலத்தில், தர்மத்தைக் காத்து நிற்கும் பொருட்டு, தன் உறவுகளை எதிர்த்து சண்டையிட வேண்டிய கடமை அர்ச்சுனனுக்கு ஏற்பட்டது. ஆனால் அவன் உறவுகளை மேற்கோள்காட்டி அந்தப் போரில் இருந்து விலகிச் செல்ல நினைத்தான். அப்போது வாழ்வின் யதார்த்தங்களையும், கடமைகளையும் அர்ச்சுனனுக்கு, கிருஷ்ணர் எடுத்துரைத்தார். அதுவே 'பகவத் கீதை' என்ற புனித நூலாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

tiruvallikeni,perumal temple,historical studies,correction ,திருவல்லிக்கேணி, பெருமாள் கோயில், வரலாற்று ஆய்வு, திருத்தலம்

குருஷேத்திரப்போரில் அர்ச்சுனனின் தேருக்கு சாரதியாக இருந்து, அவன் கடமை உணர்வில் இருந்து வழுவாத நிலையில் வழிநடத்தியவர் கிருஷ்ண பகவான். இதனால் அவர் 'பார்த்தசாரதி' என்றும் அழைக்கப்படுகிறார். இந்த தேர் ஓட்டும் சாரதி தோற்றத்திலேயே இறைவன் கோவில் கொண்டுள்ள அற்புதத் தலம்தான், சென்னை திருவல்லிக் கேணியில் உள்ள பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் ஆகும்.

எங்கும் இல்லாத வகையில் இங்கு இறைவன் முறுக்கு மீசையுடன் காணப்படுகிறார். பார்த்தசாரதி திருக்கோவிலானது, புராண காலத்தில் 'பிருந்தாரண்ய ஷேத்திரம்' என அழைக்கப்பட்டது. 'கேணி' என்றால் 'குளம்' என்றும் ஒரு பொருள் உண்டு. முற்காலத்தில் இக்கோவில் குளத்தில் அல்லி மலர்கள் நிறைந்திருந்ததால், இந்த ஊர் 'திரு அல்லிக் கேணி' என்ற பெயருடன் அழைக்கப்பட்டு வந்துள்ளது. அதுவே காலப்போக்கில் மருவி 'திருவல்லிக்கேணி' என்று ஆகியிருப்பதாக வரலாற்று ஆய்வுகள் சொல்கின்றன.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவிலாக, இந்த பார்த்தசாரதிப் பெருமாள் கோவில் திகழ்கிறது. இருப்பினும் இதனை 7-ம் நூற்றாண்டில் ஆலயமாக வடிவமைத்துக் கட்டியவர்கள் பல்லவ கால மன்னர்கள் என்று சொல்லப்படுகிறது. பின்னர் வந்த சோழர்களும், விஜயநகர பேரரசர்களும் இந்தக் கோவிலுக்கு மேலும் பல திருப்பணிகளைச் செய்து ஆலயத்தை மேம்படுத்தினார்கள். பெருமாளைப் பற்றி தமிழில் பாடல் பாடிய 12 பேர் 'ஆழ்வார்கள்' என்று அழைக்கப்படுகிறார்கள்.

இந்த பன்னிரண்டு ஆழ்வார்களில், 'திருமழிசை ஆழ்வார், பேயாழ்வார் மற்றும் திருமங்கை ஆழ்வார்' ஆகியோரால் மங்களாசாசனம் செய்யபட்ட திருத்தலம் இதுவாகும். வைணவ கோவில்களில் 108 திவ்ய தேசங்கள் என்று அழைக்கப்படும் முக்கியமான திருத்தலங்களில், பிரசித்திப் பெற்ற திருக்கோவிலாக, திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் திருக்கோவில் திகழ்கிறது.

Tags :