Advertisement

காதை சுத்தப்படுத்த இதை எல்லாம் செய்யாதீர்கள்

By: Nagaraj Fri, 22 July 2022 5:09:17 PM

காதை சுத்தப்படுத்த இதை எல்லாம் செய்யாதீர்கள்

சென்னை: தலைக்கு குளிக்கும் போதெல்லாம் காது அடைத்துக் கொள்கிறது. அப்போது காது சரியாகக் கேட்பதில்லை. `பட்ஸ்’ கொண்டு காதை சுத்தப்படுத்திய பிறகுதான் பிரச்சினை சரியாகிறது என சிலர் சொல்வதை கேட்டு இருப்போம்.

காது அரிப்பு, காதில் அழுக்கு சேருவது, குரும்பி சேர்வது, சீழ் பிடிப்பது, காது அடைத்துக்கொள்வது போன்ற பல்வேறு சந்தர்ப்பங்களில் ஊக்கு, `ஹேர் பின்’, தீக்குச்சி, பேனா, பென்சில், பட்ஸ் என்று கையில் கிடைப்பதை எல்லாம் காதுக்குள் சொருகிக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் உள்ளது. காரணம், காது குடைவதில் கிடைக்கும் சுகம்.

இதற்கு அடிமையானவர்களுக்கு இது ஒரு பழக்கமாகவே ஆகிவிடுகிறது. ஆனால், இது ஆபத்தானது. பட்ஸ் வைத்து காது குடைவதால், காதில் தொற்று ஏற்படவே வழி வகுக்கும். இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனை காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது. பல நேரங்களில் அழுக்கை வெளியில் எடுப்பதற்குப் பதிலாகக் காதின் உட்புறம் உள்ள செவிப்பறைக்கு தள்ளிவிடுவதுதான் நடக்கும்.
அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். `பட்ஸ்’ பட்டு செவிப்பறை கிழித்துவிட்டால், காது வலி, காது இரைச்சல், காது கேட்காமல் போவது போன்ற ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.

ear piercing,not necessary,coconut oil,eardrum,medicine ,காது குடைதல், அவசியமில்லை, தேங்காய் எண்ணெய், செவிப்பறை, மருந்து

அதனால் முடிந்தவரை பட்ஸ் கொண்டு காது குடைவதை தவிர்ப்பதே நல்லது. காதுகள் சரியாகக் கேட்க வேண்டுமானால், செவிப்பறை சீராக இருக்க வேண்டும். இதற்கு இயற்கை நமக்கு தந்துள்ள பாதுகாப்பு வளையம்தான், காதுக் குரும்பி. காதுக்குள் ‘செருமினஸ் சுரப்பிகள்’ உள்ளன.

இவைதான் காதுக்குள் குரும்பியை சுரந்து, செவிப்பறையை பாதுகாக்கின்றன. குறிப்பாக, காதுக்குள் நுழையும் பூச்சிகள், அழுக்குகள், அந்நியப் பொருட்கள் போன்றவை செவிப்பறையை பாதிக்காதபடி தடுப்பது, இந்த குரும்பிதான்.

இதை அகற்ற வேண்டிய அவசியமில்லை. தானாகவே மெல்ல மெல்ல ஊர்ந்து வெளியில் வந்துவிடும். அப்படி அகற்ற வேண்டிய கட்டாயம் ஏற்படுமானால், இதற்கென உள்ள காது சொட்டு மருந்து அல்லது தேங்காய் எண்ணெயை காதில் சில சொட்டுகள் விட்டால், அதில் ஊறி, தானாகவே வெளியில் வந்துவிடும்.

Tags :