ஆரோக்கியம் மேம்பட என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்
By: Nagaraj Wed, 19 July 2023 9:03:24 PM
சென்னை: தற்போது உடல் மற்றும் மனநலம் சார்ந்த பிரச்சினைகளால் பெண்கள் அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். அதனை தவிர்க்க ஆரோக்கியம் சார்ந்த நடவடிக்கைகளை புதிதாக ஆரம்பிக்கலாமே. உங்களால் செய்ய முடிந்த எளிமையான சிறு சிறு முயற்சிகளைத் தொடர்ந்து செய்தால் ஆரோக்கியம் மேம்படும்.
அவற்றுக்கான ஆலோசனைகளை இங்கே பார்க்கலாம். குடும்பத்தின் ஆணிவேராக இருக்கும் பெண்கள், தங்கள் ஆரோக்கியத்தின் நிலை என்னவென்று தெரியாமல், அன்றாடம் ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கின்றனர். எனவே 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், வருடத்தில் ஒரு முறையாவது முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது நல்லது. இந்த ஆண்டில் இருந்து தொடங்கி, இனி ஒவ்வொரு வருடமும் இதைக் கடைப்பிடித்து வரலாம்.
40 வயதுக்குப் பிறகு பெண்களுக்கு ரத்தசோகை, கால்சியம் பற்றாக்குறை போன்ற பிரச்சினைகள் வர ஆரம்பிக்கும். அதனால் தினசரி உணவில் கீரை வகைகள், முழுதானியங்கள், சிறுதானியங்கள், பேரீட்சை, உலர் திராட்சை ஆகியவற்றை சேர்த்து வரலாம். பெண்கள் தங்கள் வயது மற்றும் உயரத்துக்கேற்ப உடல் எடையை பராமரிப்பது முக்கியமானது.
திருமணம் ஆன பெண்கள் பலரும் புத்தாண்டில் உடல் எடை பராமரிப்பு குறித்த தீர்மானத்தை எடுப்பதும், அதைத் தொடர்ந்து கடைப்பிடிக்காமல் கைவிடுவதும் அதிகம் என ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. வீட்டில் இருந்து தனியாகப் பயிற்சிகள் செய்வதை விட, ஜிம், யோகா மையங்கள் போன்றவற்றுக்குச் சென்று குழுவாக செயல்படலாம். இதனால் ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்திக்கொண்டே பயிற்சி செய்யும் வாய்ப்பு கிடைக்கும்.