வயதான தோற்றம் ஏற்பட என்ன காரணம்? தெரிந்து கொள்வோம் வாங்க
By: Nagaraj Mon, 20 Nov 2023 09:40:06 AM
சென்னை: வாழ்வின் இறுதிக்கட்டமான முதுமை பருவத்தை எதிர்கொள்வதை யாராலும் தடுக்கவோ, தவிர்க்கவோ முடியாது. ஆனால் சில தவறான வாழ்க்கை பழக்கங்களால் பலரும் விரைவாகவே முதுமைக்கு தள்ளப்படுகிறார்கள். இளம் பருவத்திலேயே வயதான தோற்றத்திற்கு ஆளாகிறார்கள். அதற்கு வித்திடும் பழக்கவழக்கங்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
உணவை தவிர்ப்பது: பிசியான வேலை, வாழ்க்கை முறை, இரவு நேர வேலை, காலையில் தாமதமாக எழுவது போன்ற காரணங்களால் சரியாக சாப்பிடாமல் இருந்தாலோ, உணவை தவிர்த்தாலோ உடலில் மாற்றம் உண்டாகிவிடும். உடலுக்கு போதுமான ஆற்றல் கிடைக்காமல் பலவீனமாகிவிடும். வயது அதிகரிப்பதற்கு அதுவும் ஒரு காரணமாகிவிடும்.
தேநீர் பழக்கம்: தேநீர் மற்றும் காபியில் ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. ஆனால் அவற்றை குறிப்பிட்ட அளவிற்கு உட்கொண்டால் மட்டுமே நன்மைகளை பெற முடியும். அதிகமாக டீ மற்றும் காபி உட்கொள்வது விரைவாகவே முதுமையாக்கி விடும். பருவகால உணவுகள் பருவகால உணவுகளை கட்டாயம் உட்கொள்ள வேண்டும். அவை இயற்கை முறையில் பயிரிடப்படுவதாக இருந்தால் அதிகம் சாப்பிட வேண்டும்.
அவற்றுள் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பிட்ட பருவத்தில் விளையும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்ளும்போது உடல் நலம் மேம்படும். விரைவாகவே வயதாகும் அறிகுறி எட்டிப்பார்க்காது.
மதுப்பழக்கம்: மது உடல் உறுப்புகளை பலவீனப்படுத்திவிடும். தொடர்ந்து மது அருந்தினால் உங்களுக்கு வேகமாகவே வயதாகிவிடும். ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் கெடுத்துவிடும். வயது அதிகமான நபர் போல் தோற்றமளிக்க செய்து முதுமையை எட்டவைப்பதுடன் ஆயுளையும் குறைத்துவிடும்.
உடல் செயல்பாடு இல்லாமை: நீரிழிவு நோய், இதயம் சார்ந்த நோய் பாதிப்புகள் ஏற்படுவதற்கு உடற்பயிற்சியின்மையே காரணம். நடைப்பயிற்சியை கூட தவிர்ப்பது உடலை பலவீனப்படுத்திவிடும். பக்கத்தில் இருக்கும் இடத்திற்கு செல்வதற்கு கூட இரு சக்கர வாகனத்தை பயன்படுத்துவது நல்லதல்ல. அதனை நடைப்பயிற்சிக்கான வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம். வயது அதிகரிக்கும்போது உடல் செயல்பாடும் அதிகரிக்க வேண்டும். இல்லாவிட்டால் வயது இன்னும் அதிகரித்துவிட்டது போன்ற தோற்றம் உண்டாகிவிடும்.