Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • பிள்ளைகளின் முன் சண்டை போடுகிறீர்களா?...இதோ காத்திருக்கு ஆபத்து!

பிள்ளைகளின் முன் சண்டை போடுகிறீர்களா?...இதோ காத்திருக்கு ஆபத்து!

By: Monisha Tue, 30 June 2020 3:59:02 PM

பிள்ளைகளின் முன் சண்டை போடுகிறீர்களா?...இதோ காத்திருக்கு ஆபத்து!

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து நம்மைத் தற்காத்துக்கொள்ளும் வகையில் நாம் அனைவரும் வீட்டிற்குள் அடைக்கலமாகியுள்ளோம். இந்த காலகட்டத்தில் தேவையற்ற வாக்குவாதங்களும், சண்டை சச்சரவுகளும் குழந்தைகளை பெரிதும் பாதித்துவிடும். பாசத்தைக் காட்ட வேண்டிய பெற்றோர் தங்களுக்குள் தொடர்ந்து வம்பும், வழக்கோடும் சண்டையிட்டுக் கொண்டிருந்தால் அந்த வீடு குழந்தைகளுக்கு ஒரு நரகமாகத்தான் தென்படும். இந்த பாதிப்பு அக்குழந்தையின் வாழ்நாள் முழுவதும் துரத்திக்கொண்டே இருக்கும். எனவே இந்த நேரத்தில் பெற்றோர் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும்?

உங்கள் பிள்ளைகளின் முன் ஒருபோதும் சண்டை போடாதீர்கள். அவர்கள் முன்னால் ஒருவருக்கொருவர் மரியாதை செலுத்துங்கள். ஒருபோதும் ஒருவரையொருவர் குறைகூற வேண்டாம். உங்கள் குழந்தைகள் தவறான பாதையைத் தேர்ந்தெடுக்க நீங்களே காரணமாகிவிடக்கூடாது என்பதில் கவனமாக இருங்கள். ஒருவருக்கொருவர் பயன்படுத்தும் மொழி மற்றும் தொனியில் கவனம் கொள்ளுங்கள்.

children,parents,fight,argue,impact ,குழந்தைகள்,பெற்றோர்,சண்டை,வாக்குவாதம்,பாதிப்பு

முக்கியமாக விவாதிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் உங்கள் கருத்து வேறுபாடுகள் பற்றி குழந்தைகளிடம் பேசுங்கள். திறம்பட மோதல்களைத் தவிர்ப்பது எப்படி என்பதை அவர்களுக்கு உணர்த்துங்கள். தீவிரமான வாக்குவாதத்தின்போது உங்கள் குழந்தைகளை அதில் ஈடுபடுத்த வேண்டாம். உங்கள் பிள்ளைகளுக்கு முன்னால் சண்டையிட நேர்ந்தால், அவர்கள் முன்னாலேயே அதைத் தீர்த்தும் விடுங்கள். முக்கியமாக ஈகோவை விலக்கி வைத்துவிடுங்கள், உண்மையான அன்பும் அக்கறையும் இருக்கும் இடத்தில் ஈகோவுக்கு இடமில்லை!

சண்டையிடுவதும் வாதிடுவதும் திருமண வாழ்க்கையின் ஒரு அங்கம்தான் என்றாலும் அதற்குரிய எல்லையைத் தாண்டாமல் இருப்பது அவசியம். பெற்றோரைப் பார்த்து பிரச்சனைகளுக்கு இது போன்ற சச்சரவுகள்தான் தீர்வு என்றே குழந்தைகள் நம்பத் தொடங்குவார்கள். பெற்றோரின் கைகலப்பு பிள்ளைகளுக்கு மிகுந்த மன உளைச்சலை ஏற்படுத்தி எதிர்மறை உணர்ச்சிகளைத் தூண்டுவதோடு அவர்களின் பாதுகாப்பின்மைக்கும் வழிவகுக்கிறது.

children,parents,fight,argue,impact ,குழந்தைகள்,பெற்றோர்,சண்டை,வாக்குவாதம்,பாதிப்பு

இரவில் தூக்கமின்மையோடு சுயமரியாதையும் பாதிக்கப்படுவதால் தாழ்வு மனப்பான்மைக்கு ஆட்படுகிறார்கள். பெற்றோர் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டிருக்கும்போது குழந்தைகள் அதைப்பற்றியே நினைத்துக்கொண்டிருக்கும் நிலையில் வேறு எதிலும் கவனம் செலுத்த முடியாமல் போகலாம்.

ஆக, பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் முன்னிலையில் வாதிடுவது குழந்தையின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும், வளர்ச்சிக்கும் தீங்கு விளைவிக்கும் என்பது உறுதி. எனவே, இதனை ஒவ்வொரு பெற்றோர்களும் புரிந்து கொண்டு உங்கள் குழந்தைகளின் எதிர்கால வளர்ச்சி உங்கள் கையில் இருப்பதை தெரிந்து வாழுங்கள் அன்பாக!

Tags :
|
|