Advertisement

  • வீடு
  • உறவுகள்
  • உங்கள் மணவாழ்க்கை எந்த சிக்கலும் இன்றி சுவையானதாக இருக்க வேண்டுமா?

உங்கள் மணவாழ்க்கை எந்த சிக்கலும் இன்றி சுவையானதாக இருக்க வேண்டுமா?

By: Monisha Mon, 06 July 2020 12:54:24 PM

உங்கள் மணவாழ்க்கை எந்த சிக்கலும் இன்றி சுவையானதாக இருக்க வேண்டுமா?

எங்கோ பிறந்த ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் என்னும் பந்தத்தில் இணைந்து, தங்கள் இல்லற வாழ்க்கையை புதிதாக தொடங்குகின்றனர். திருமண வாழ்வு என்பது ஒரு கரடுமுரடான நீண்ட பயணம் போன்றது. நிறைய காதல்கள், மோதல்கள், சண்டைகள், சமரசங்கள், சமாதானங்கள், விட்டுக்கொடுத்தல் என்று அத்தனையும் சேர்ந்த கலவையாக இருக்கும். உங்கள் மணவாழ்க்கை எந்த சிக்கலும் இன்றி சுவையானதாக இருக்க என்னென்ன வழிகள் உள்ளன என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இல்லறத்தில் அன்புதான் ஆணிவேர் என்பது அசைக்க முடியாத உண்மை. இருவரும் ஒருவரையொருவர் மனதார நேசியுங்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் உங்கள் அன்பைப் பார்வையாலும், செய்கையால், வார்த்தைகளும் வெளிப்படுத்திக் கொண்டே இருங்கள். விளக்கிற்கு எண்ணெய் போல, ஒளிவீசும் வாழ்விற்கு அன்பு அவசியம். 'ஐ லவ் யூ', 'நீ அழகா இருக்க' இப்படி சில பல வார்த்தைகளைச் சொல்லிப் பாருங்கள். உங்கள் ஜோடி உங்களை அன்பு மழையில் திக்குமுக்காட வைத்து விடுவார்.

திருமணமான புதிதில் நகமும் சதையுமாக இருக்கும் பல தம்பதிகள் நாட்கள் செல்ல செல்ல சண்டைக்கோழிகளாக மாறி விடுகின்றனர். இதற்கு என்ன காரணம் என்று சற்று ஆராய்ந்து பார்த்தால், ஆரம்பக்கால மணவாழ்வில் ஒருவரின் குறை மற்றவருக்கு முழுவதாக தெரிவதில்லை. நாட்கள் போகப்போக கணவன் மற்றும் மனைவி இருவருக்குமே மற்றவர்களிடம் உள்ள குறைகள் வெட்டவெளிச்சமாகப் புரியத் தொடங்குகின்றன.

marriage,love,abandonment,child care,disagreement ,மணவாழ்க்கை,அன்பு,விட்டுக்கொடுத்தல்,குழந்தை பராமரிப்பு,கருத்து வேறுபாடு

கற்பனையில் நினைத்த விஷயம் ஒன்றாகவும், உண்மை நிலை மற்றொன்று ஆகவும் உள்ளத்தை ஆண் பெண் என்று இருவராலும் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதுவே பிற்காலத்தில் சண்டைகள் ஆகவும், விரிசல்கள் ஆகவும் உருமாறுகின்றன. மனிதர்கள் குறைகளையும், நிறைகளையும் கொண்டவர்கள்தான் என்ற உண்மையை உணர்ந்து கொண்டாலே தேவையில்லாத மனக்கசப்புகள் வராது. உங்கள் கணவர் உங்களிடம் குறிப்பிடும் நியாயமான குறைகளைக்களைய முனையுங்கள். அதேபோல கணவனும் மனைவி கூறும் குறைகளை நிவர்த்தி செய்ய முயலவேண்டும்.

கணவன் மனைவிக்குள் வரும் ஒரு முக்கியமான பிரச்சனை, 'நான் தான்' என்ற உணர்வுதான்(EGO). நான் சொல்வதை மட்டுமே மனைவி கேட்க வேண்டும் என்று கணவனும், நான் கிழித்த கோட்டை கணவன் தாண்டக் கூடாது என்று மனைவியும் எதிர்பார்க்கின்றனர். இது மாதிரியான எண்ணங்கள் உறவை முழுதாக பாதிக்கும் என்பதை உணர மறுக்கிறார்கள். எந்த விஷயங்களாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து கலந்து ஆலோசித்தது, நன்மை மற்றும் தீமைகளை நியாயமாகப் புரிந்து முடிவுகளை எடுத்தால், போட்டி பொறாமை மனப்பான்மையே வராது.

திருமணத்திற்கு முந்தைய கால கட்டத்திலும், அதற்குப் பிந்தைய சில மாதங்களிலும் கணவன்-மனைவியாக மணிக்கணக்கில் நீங்கள் இருவரும் பேசி இருப்பீர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் வேலை குழந்தை என்று வந்த பிறகு, இருவரும் பேசிக்கொள்ள கூட நேரம் இல்லாத சூழ்நிலை ஏற்பட்டிருக்கும். ஒருகட்டத்தில், 'நீ யாரோ! நான் யாரோ!' என்ற ரீதியில் கூட நாட்கள் ஓட தொடங்கிவிடும். இருவரும் தங்கள் உணர்வுகளை வெளிப்படையாகப் பரிமாறிக் கொள்ளாமல் மனதிலேயே அடைத்து வைத்து ,மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூட நேர்ந்துவிடும். எத்தனையோ வேலைகள், சூழ்நிலைகள் இருக்கட்டுமே. நாம் வாழும் நாட்கள் மிகவும் குறுகியது. காலங்கள் வேகமாக ஓடிய பின்னர், ஒருநாளும் இழந்த சந்தோஷங்களை மீட்க முடியாது. அன்று வருந்துவதற்குப் பதில் இன்று முதலே நேரம் ஒதுக்கி மனம் விட்டுப் பேசலாம்.

marriage,love,abandonment,child care,disagreement ,மணவாழ்க்கை,அன்பு,விட்டுக்கொடுத்தல்,குழந்தை பராமரிப்பு,கருத்து வேறுபாடு

பொதுவாகக் கணவனுக்கு மனைவி குடும்பத்தோடு ஒட்டி பழகுவது சிரமமாக உள்ளது. அதேபோல மனைவிக்கும் கணவன் குடும்பத்தாரோடு உறவாடுவது சற்று சிரமமானதாகவே இருக்கின்றது. இதில் வீட்டுக்கு, ஒருவர் குடும்பத்தினர் வரும் பொழுது மற்றொருவர் பாராமுகமாக நடந்து கொள்கின்றனர். இது முற்றிலும் தவறானது. மனைவிக்காக கணவன், மனைவி உறவுகளுடனும், கணவனுக்காக மனைவி, கணவன் உறவுகளுடனும் அன்பாக நடந்து கொண்டாலே பல சண்டைகள் தவிர்க்கப்பட்டு விடும்.

வீடு சார்ந்த விஷயங்கள், குழந்தை பராமரிப்பு என்று நிறைய வேலைகள் அன்றாடம் இருந்து கொண்டே தான் உள்ளது. இந்த மாதிரி சமயங்களில் ஒருவருக்கொருவர் அனுசரணையாக உதவிகளைப் பரிமாறிக் கொண்டாலே உறவு அழகாக நிலைத்திருக்கும். 'நான் செய்ய மாட்டேன்! இது என் வேலை இல்லை! உன் வேலை!' என்பது போன்ற மனப்பான்மைகளை எல்லாம் முளையிலேயே வளரவிடாமல் தடுத்து விடுங்கள். நம் குடும்பம், நம் வீடு, நம் குழந்தைகள் என்ற எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள்.

எவ்வளவுதான் ஒற்றுமையான தம்பதிகளாக இருந்தாலும் சில சந்தர்ப்பங்களில் கருத்து வேறுபாடுகளைத் தவிர்க்க இயலாது. அது மாதிரியான விஷயங்களில் வாதிடத் தொடங்கினால், சண்டை முற்றி பிரச்சனைகள் வலு எடுக்க தொடங்கும். அதனால் வாதங்களைத் தவிர்த்து விடுவது சிறந்தது. சில மணி நேரங்கள் அல்லது சில நாட்கள் கழித்து மீண்டும் அதே செய்தியைப் பற்றிப் பேசும்பொழுது பிரச்சனை சுமுகமாகத் தீரும். இதை அனுபவத்தால் நன்கு உணரமுடியும்.

marriage,love,abandonment,child care,disagreement ,மணவாழ்க்கை,அன்பு,விட்டுக்கொடுத்தல்,குழந்தை பராமரிப்பு,கருத்து வேறுபாடு

ஒரு சுமுகமான உறவு நிலவ உண்மை மிகவும் அவசியம். கணவனோ மனைவியோ எந்த விஷயத்தையும் ஒளிவு மறைவின்றி பகிர்ந்து விடுவது நல்லது. உதாரணமாகச் சொல்லாமல் கடன் வாங்குவது போன்றதைச் சொல்லலாம். பொய் சொல்லி மறைக்கும் பொழுது அது பிற்காலத்தில் வெளியே வந்துவிடும். இதனால் மண வாழ்க்கை முறியும் வாய்ப்பும் ஏற்பட்டுவிடும். எந்த உறவிலும் நேர்மை மிக அவசியம் என்பதைக் கணவன்-மனைவி நினைவில் கொள்ள வேண்டும்.

திருமண வாழ்வு என்பது ஒன்று இரண்டு நாட்களுடன் முடியும் விழா கிடையாது. வாழ்நாள் முழுவதும் நம்முடன் வரும் பந்தம். ஆக இந்த உறவு நல்ல படியாக நிலைத்து இருக்க எல்லா வகையிலும் கண்ணும் கருத்துமாக இருப்பது அவசியம். கணவன் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ ஏதாவது சிறப்பாக செய்தால் மனைவி மனம் திறந்து பாராட்ட வேண்டும். அதேபோல மனைவி செய்யும் சிறப்பான காரியங்களை, கணவன் மனதார பாராட்ட வேண்டும். இது மாதிரியான அன்பும், பாராட்டுகளும் மனநிறைவைக் கொடுக்கும். வாழ்நாள் முழுவதும் விரிசலில்லா பந்தமாகத் தொடர வாய்ப்பும் அமையும்.

இந்த வாழ்க்கையை ரசித்து வாழ்வதற்கு தானே? எப்போதும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டே இருக்காமல், அவ்வப்போது சில நாட்களை ஒதுக்கி வையுங்கள். உங்களுக்குப் பிடித்த சுற்றுலாதலம், சினிமா அல்லது உறவினர் வீடு என்று எங்காவது மகிழ்ச்சியாகச் சென்று வாருங்கள். இது உங்களுக்கு நிறைவான புத்துணர்ச்சியையும் ஆனந்தத்தையும் தரும். உறவு நிலையும் மேம்படும்.

Tags :
|