பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் பாதிப்பு

உருமாறிய கொரோனா வைரஸ் முதன்முதலில் பிரிட்டனில் பரவியது. இது பழைய கொரோனா வைரசை விட மிகவும் வேகமாக பரவுவதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இதனால், பிரிட்டனுடனான விமான போக்குவரத்தை இந்தியா உள்பட பல நாடுகள் தடை செய்தன. இருப்பினும், உருமாறிய கொரோனா வைரஸ் இத்தாலி, பிரான்ஸ், சிங்கப்பூர், தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட பல நாடுகளுக்கு பரவியது. இதனால், மக்கள் மிகுந்த கலக்கம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 116 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்தது. அவர்களுக்கு உருமாறிய கொரோனா தான் பரவியுள்ளதா? என்பதை கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகளை இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் ஆய்வுகளை மேற்கொண்டது. இந்நிலையில், இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக ஐசிஎம்ஆர் இன்று அறிவித்துள்ளது.

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்களில் 6 பேருக்கு உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளது.

பெங்களூருவை சேர்ந்த 3 பேருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த 2 பேருக்கும், புனேவை சேர்ந்த 1 நபருக்கும் உருமாறிய கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் தொற்று பரவத்தொடங்கியுள்ளதால் மக்கள் சற்று கலக்கம் அடைந்துள்ளனர்.