புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசம்: முதல்வர் அறிவிப்பு

புதுச்சேரி மக்களுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும் என்று முதல்வர் நாராயணசாமி அறிவித்துள்ளார்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த உலகம் முழுவதும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் முயற்சிகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன

இந்த நிலையில் கொரோனா தடுப்பூசியிலும் தற்போது அரசியல் புகுந்துவிட்டது. ஏற்கனவே தமிழக அரசு தடுப்பூசி கண்டுபிடிக்கபட்டவுடன் தமிழக மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

இதேபோல் பாஜகவும் பீகார் மாநில தேர்தல் அறிக்கையில் பீகார் மாநில மக்கள் மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி கொடுக்கப்படும் என்று அறிவித்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது தமிழகம் மற்றும் பீகார் மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமியும் இதே அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த பிறகு புதுச்சேரி மக்களுக்கு இலவசமாக தடுப்பூசி வழங்கப்படும் என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.

இதே ரீதியில் சென்றால் நாடு முழுவதும் இலவச தடுப்பூசி வழங்க அந்தந்த மாநில அரசுகள் அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.