பாதுகாப்பாக இருக்கிறோம் என சுயதிருப்தி அடைந்துவிட வேண்டாம்-உலக சுகாதார அமைப்பு

உலகம் முழுவதும் பரவி மனித பேரழிவை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. கடந்த பத்து நாட்களில் உலகளவில் நாள் தோறும் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை ஒருலட்சமாக உள்ளது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை மட்டும் 1.36 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 75 சதவீதம் பேர் தெற்காசியா, அமெரிக்காவை சேர்ந்தவர்கள் ஆவர். கொரோனா வைரஸிடமிருந்து ஐரோப்பிய நாடுகள் மெல்ல மெல்ல விடுபட்டு வருகின்றன. தற்போது அமெரிக்கா கொரோனாவால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகிறது.

ஆப்பிரிக்காவின் பல்வேறு நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. சில நாடுகளில் மட்டுமே கொரோனா பாதிப்பு ஆயிரத்திற்கும் குறைவாக உள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ராஸ் அதானம் கேப்ரியாசஸ் பேட்டி அளித்தபோது, கொரோனாவிலிருந்து விடுபட்ட நாடுகள் சுயதிருப்தி அடைவது பாதுகாப்பற்றது. நாம் பாதுகாப்பாகத்தானே இருக்கிறோம் என்ற சுயதிருப்தி என்பது ஆபத்தானது. உலகளவில் பெரும்பாலான மக்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கொரோனா பாதிப்புடனே அலைவதாக தெரிவித்துள்ளார். மேலும், எந்த நாடும் கவனக்குறைவாக இருப்பதற்கு இது சரியான நேரம் அல்ல என்று கூறியுள்ளார்.

மேலும், உலகளவில் சில நாடுகள் கொரோனாவிலிருந்து விடுபட்டு இயல்புநிலைக்கு வருவதை வரவேற்பதாகவும், ஆப்பிரிக்காவின் பெரும்பாலான நாடுகளில் புதிய புவியியல் பகுதிகள் உட்பட வழக்குகள் அதிகரித்து வருவதாகவும் டெட்ராஸ் அதானம் கூறியுள்ளார்.