தமிழகத்தில் இன்று முதல் 3 நாட்களுக்கு சில மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை : சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுயிருப்பதாவது: தென் தமிழகம் மற்றும் அதையொட்டிய பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவலாக மழை பெய்து உள்ளது.

இதனை அடுத்து தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களில் இன்றும், நாளையும் பெரும்பாலான இடங்களிலும், வருகிற 7, 8, 9-ம் தேதிகளில் சில இடங்களிலும், 10-ம் தேதி ஓரிரு இடங்களிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


அதைத்தொடந்து இன்று நீலகிரி, ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மேற்கூறிய மாவட்டங்கள் மற்றும் மதுரை, விருதுநகர், வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும்.

மேலும் வரும் 7-ம் தேதி கோவை மாவட்டத்தின் மலைப் பகுதிகள், நீலகிரி, வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் புறநகரின் சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது .