ரசாயனம் கலந்து கெட்டுப்போன மீன்கள் சோதனையில் பறிமுதல்

ராமேஸ்வரம்: கெட்டுப்போன மீன்கள் பறிமுதல்... ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் தினசரி மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் ரசாயனம் கலந்த 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மீன்களானது விரைவில் கெட்டுப்போகும் தன்மை உடையது இதனால் கடலில் பிடிக்கப்படும் மீன்களை மீனவர்கள் ஐஸ் கட்டிகளுடன் வைத்து கரைக்கு கொண்டு வந்து விற்கின்றனர்.

மீனவர்களிடமிருந்து மீன் வாங்கும் வியாபாரிகள் விற்பனையில் ஈடுபடும் முன்பு அதில் பார்மாலின் என்ற ரசாயனத்தை தடவுகின்றனர். இப்படி செய்வதால் மீனானது 15 நாட்கள் வரை கெட்டுப் போகாமல் இருக்கும். இவ்வாறு ரசாயனம் கலந்த மீன்களை உண்பதால் உடலில் புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்தான நோய்கள் ஏற்படக்கூடும்.

ராமநாதபுரத்தில் பிடிக்கப்படும் மீன்களில் மார்க்கெட்டுகளில் விற்கப்படும் போது பார்மாலின் என்ற ஒரு விதமான ரசாயனத்தை கலந்து விற்கப்படுவதாகவும். மேலும், கெட்டுப்போன மீன்களை விற்பதாகவும் தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு புகார் எழுந்துள்ளது. இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையில் ரசாயனம் கலந்த 15 கிலோ கெட்டுப்போன மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.