ரூ.149 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல்... அமலாக்கத்துறை அறிக்கை

புதுடெல்லி: அன்னிய செலாவணி மற்றும் டெபாசிட் இல்லாமல் தங்க கட்டிகளை வாங்கி ஏமாற்றியதாக இரண்டு நிறுவனங்களிடம் இருந்து ரூ.149 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

ஐதராபாத்தில் உள்ள எம்எம்டிசி லிமிடெட் நிறுவனத்திடம் போதிய அன்னிய செலாவணி மற்றும் டெபாசிட் இல்லாமல் தங்க கட்டிகளை வாங்கி ஏமாற்றியதாக இரண்டு நிறுவனங்கள் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


இந்நிலையில், கடந்த 17ம் தேதி எம்பிஎஸ் ஜூவல்லர்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் முசாதிலால் ஜூவல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் இயக்குனர்கள் சுகேஷ் குப்தா, அனுராக் குப்தா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் உட்பட 5 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

ஆந்திரா, ஐதராபாத், விஜயவாடா ஆகிய இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. சுகேஷ் குப்தா கடந்த 18ம் தேதி கைது செய்யப்பட்டார். கடந்த 19ம் தேதி அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், இந்த 2 நிறுவனங்களிடமிருந்தும் ரூ.149 கோடி மதிப்பிலான நகைகள் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.