கோயில் இடமாற்றத்தை கண்டித்து மக்கள் போராட்டம்

உத்தரபிரதேசம்: மக்கள் போராட்டம்... உத்தரப் பிரதேசத்தில் ஹனுமன் கோயில் இடமாற்றம் செய்யப்படுவதைக் கண்டித்து மக்கள் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த ஹனுமன் கோயில் தில்லி-லக்னௌ தேசிய நெடுஞ்சாலைக்கு அருகில் உள்ளது. இந்த தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதால் கோயில் இடமாற்றம் செய்யப்பட வேண்டும் என்ற கட்டாயத்திற்கு அரசு தள்ளப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த சம்பவத்தில் தில்கார் காவல் நிலைய அதிகாரி வீரேந்திர சிங்கினால் இதுவரை 32 பேர் காவலில் எடுக்கப்பட்டுள்ளனர். அதில் அந்த ஹனுமன் கோயிலின் அர்ச்சகர்கள் மற்றும் சில கிராம மக்களும் அடங்குவர். பதற்றமான சூழல் நிலவுவதால் கோயிலைச் சுற்றிலும் காவல் துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹனுமன் கோயில் தற்போது இருக்கும் இடத்திலிருந்து 80 மீட்டர் தொலைவிற்கு நகர்த்தப்பட உள்ளது. அதற்கான வேலைகள் கடந்த செப்டம்பர் 17 முதல் தொடங்கியது. ஆனால், அரசின் இந்த முடிவிற்கு எதிராக சில இந்து அமைப்பினர் போராடி வருகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் சார்பில் கூறியதாவது: “ கோயில் தில்கர் பகுதியின் கச்சியானி கேதாவில் கடந்த 100 ஆண்டுகளாக உள்ளது. சாலை விரிவாக்கம் செய்வதாலேயே அந்த கோயில் சாலையின் நடுவில் வரும் சூழல் உருவாகியுள்ளது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக இந்த கோயிலை இடமாற்றம் செய்வதற்காக கிரேன் வரவழைக்கப்பட்டு இருந்தது. அப்போது கிரேனில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறினால் கோயில் இடமாற்றம் செய்யப்படவில்லை. அதன்பின்னர், கோயிலின் மீதான மக்களின் நம்பிக்கை அதிகரித்தது.” என்றனர்.