பாலியல் குற்றச்சாட்டில் சிட்னியில் இலங்கை வீரர் கைது

சிட்னி: இலங்கை கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் தனுஷ்கா குணதிலகா. ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான அணியில் இவர் இடம் பெற்று உள்ளார். 31 வயதான குணதிலகா உலக கோப்பையில் கடைசியாக நமீபியாவுக்கு எதிராக கடந்த 16-தேதி நடந்த முதல் சுற்று ஆட்டத்தில் விளையாடினார்.

அதன் பிறகு அவர் காயம் அடைந்தார். இதனால் அவருக்கு பதிலாக அஸ்கென் பண்டாரா அணியில் சேர்க்கப்பட்டார். ஆனாலும் அவர் அணியோடு ஆஸ்திரேலியாவில் இருந்தார். இந்த நிலையில் கற்பழிப்பு வழக்கில் தனுஷ்கா குணதிலகாவை சிட்னியில் போலீசார் கைது செய்தனர். 29 வயதான பெண் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டி இருந்தார். கடந்த 2-ந்தேதி ஒரு வீட்டில் வைத்து நடந்தது. டேட்டிங் செயலி மூலம் அந்த பெண்ணுடன் குணதிலகா அறிமுகமானார்.

தனது அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக அவர் மீது அந்த பெண் 4 குற்றச்சாட்டுகளை கூறி உள்ளார். கைதான 20 ஓவர் உலக கோப்பையில் இலங்கை அணி அரை இறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது. அந்த அணி அங்கிருந்து கொழும்பு புறப்பட்டது. குணதிலகா இல்லாமல் இலங்கை அணி சொந்த நாடு திரும்பியது.

பாலியல் விவகாரத்தில் குணதிலகா சிக்கி கொள்வது இது முதல் முறையல்ல. 2018-ம் ஆண்டு இலங்கையில் நார்வே நாட்டு பெண் பலாத்காரம் செய்யப்பட்டது தொடர்பாக அவரையும், அவரது நண்பரையும் போலீசார் விசாரித்தனர். இதனால் குணதிலகாவை இலங்கை கிரிக்கெட் வாரியம் சஸ்பெண்ட் செய்து இருந்தது. ஆனாலும் இந்த விவகாரத்தில் குணதிலகா கைதாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.