நான்கு கைதிகளின் சடலங்களை தகனம் செய்ய நீதிமன்றம் உத்தரவு

நீதிமன்றம் உத்தரவு... மஹர சிறைச்சாலை சம்பவத்தில் உயிரிழந்த மேலும் 4 கைதிகளின் சடலங்களை தகனம் செய்யுமாறு வத்தளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு வத்தளை நீதவான் நீதிமன்றத்தின் நீதவான் ஸ்ரீ புத்திக்க ஸ்ரீ ராகல முன்னிலையில் இன்று (புதன்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. குறித்த நால்வரில் மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த நால்வரின் சடலங்களையும் தகனம் செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

அத்துடன் சம்பவத்தில் உயிரிழந்த ஏனையவர்களின் சடலங்களுக்கு பிரேத பரிசோனைகள் இடம்பெற்று வருகின்றன. மஹர சிறைச்சாலையின் கைதிகள் சிலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து மேலும் சில கைதிகள் சிறைச்சாலையில் இருந்து தப்பிச் செல்ல முயற்சித்த சம்பவத்தை காரணமாகக் கொண்டு அங்கு சில வாரங்களுக்கு முன்னர் அமைதியின்மை ஏற்பட்டது.

அதன்படி, சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ள ஆயுள் தண்டனை கைதிகளை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த மோதலில் 11 பேர் உயிரிழந்தனர் என்பதுடன், 104 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.