Advertisement

வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்முறை

By: Nagaraj Sun, 11 Sept 2022 3:26:26 PM

வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்முறை

சென்னை: ஊறுகாய் பிரியர்களுக்கு வித்தியாசமான சுவை கொண்ட சிக்கன் ஊறுகாய் செய்து கொடுக்கலாம். பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்கு தேவையில்லை.


ஊறுகாய் நமது உணவுமுறையில் முக்கிய இடம் பிடித்து வருகிறது. சிறு அளவு ஊறுகாய், முழு உணவுக்கும் புது சுவை சேர்த்துவிடும். எலுமிச்சை, மாங்காய், பூண்டு, நார்த்தங்காய் ஆகிய ஊறுகாய்களை ருசித்து சலித்தவர்களுக்கு, வித்தியாசமான சுவை கொண்ட 'சிக்கன் ஊறுகாய்' செய்து கொடுக்கலாம். மற்ற பாரம்பரிய ஊறுகாயைப் போல பதப்படுத்தும் செயல்முறை இதற்குத் தேவையில்லை.

தேவையானவை: எலும்பு நீக்கப்பட்ட கோழிக்கறி - 500 கிராம் மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 1 மேசைக் கரண்டி எண்ணெய் - தேவையான அளவு.


மசாலா தயாரிக்கத் தேவையானவை: எண்ணெய் - 2 மேசைக் கரண்டி இஞ்சி பூண்டு விழுது - 2 மேசைக் கரண்டி மஞ்சள் தூள் - ¼ தேக்கரண்டி மிளகாய்த்தூள் - ¼ கப் கடுகுத்தூள் - 1 மேசைக் கரண்டி வெந்தயத்தூள் - ¼ தேக்கரண்டி எலுமிச்சம்பழம் - அரை மூடி

தாளிப்பதற்குத் தேவையானவை: எண்ணெய் - 2 மேசைக் கரண்டி வெந்தயம் - 1 தேக்கரண்டி காய்ந்த மிளகாய் - 5 கறிவேப்பிலை - 10 உப்பு - தேவையான அளவு

chicken pickle,talib,fenugreek,dry chillies,curry leaves ,சிக்கன் ஊறுகாய், தாளிப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை

செய்முறை: பெரிய பாத்திரத்தில், சுத்தம் செய்த கோழிக்கறி, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், இஞ்சி பூண்டு விழுதைப் போட்டு, நன்றாகக் கலந்து 30 நிமிடங்கள் ஊறவைக்கவும். வாணலியில் பொரிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடுபடுத்தவும். ஊறவைத்த கோழிக்கறியை சிறிது சிறிதாக அதில் போட்டு மிதமான தீயில் பொன்னிறமாகவும், மிருதுவாகவும் மாறும் வரை பொரித்தெடுக்கவும். மற்றொரு வாணலியில், மசாலா தயாரிக்கத் தேவையான அளவு எண்ணெய்யை ஊற்றி சூடுபடுத்தவும்.

பின்பு அதில் இஞ்சிப் பூண்டு விழுதைப் போட்டு 2 நிமிடம் வதக்கவும். அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், கடுகுத்தூள் மற்றும் வெந்தயத்தூள் சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வதக்கவும். இந்த மசாலா கலவையுடன் வறுத்த சிக்கனைச் சேர்த்து நன்றாக கலக்கவும். மற்றொரு வாணலியில் தாளிப்பதற்குத் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், வெந்தயம், காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வறுக்கவும். பின்பு அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக் கலந்து அடுப்பை அணைக்கவும்.

இந்த தாளிப்பைச் சிக்கனுடன் சேர்த்து நன்றாகக் கலந்துகொள்ளவும். பிறகு, அதை சூடு தணியும் வரை ஆறவைக்கவும். பின்பு இந்த சிக்கன் ஊறுகாயில் எலுமிச்சம்பழச் சாற்றைப் பிழிந்து, பரிமாறுங்கள்.

Tags :
|