Advertisement

ரசித்து, ருசித்து சாப்பிட பிஸிபேளாபாத் செய்முறை!!!

By: Nagaraj Sun, 31 July 2022 2:46:12 PM

ரசித்து, ருசித்து சாப்பிட பிஸிபேளாபாத் செய்முறை!!!

சென்னை: குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிஸிபேளாபாத் என்றால் மிகுந்த விருப்பம். அதை எப்படி செய்யலாம். இதோ உங்களுக்காக.

தேவையானவை: அரிசி - 2 கப், துவரம்பருப்பு - ஒரு கப், வெல்லம் - நெல்லிக்காய் அளவு, புளி - எலுமிச்சை அளவு, மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன், சின்ன வெங்காயம் - கால் கிலோ, நறுக்கிய கேரட், பீன்ஸ், நூல்கோல், பட்டாணி, டபுள் பீன்ஸ் கலவை - 2 கப், வேக வைத்து எடுத்த முருங்கைக்காய் விழுது - ஒரு கப், கறிவேப்பிலை - சிறிதளவு, நெய், நல்லெண்ணெய் - தலா ஒரு டேபிள்ஸ்பூன், உப்பு - தேவையான அளவு.

மசாலாவுக்கு: காய்ந்த மிளகாய் - 10, தனியா - அரை டேபிள்ஸ்பூன், உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு - தலா அரை டீஸ்பூன், வெந்தயம் - ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் - ஒரு கப், அன்னாசிப்பூ, ஏலக்காய், லவங்கம் - தலா 4, வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், சீரகம் - 2 டீஸ்பூன், பெருங்காயம் - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 5.

peanuts,grated coconut,cumin,amaranth,rice ,வேர்க்கடலை, தேங்காய் துருவல், சீரகம், பெருங்காயம், சாதம்

செய்முறை: 2 டம்ளர் வெந்நீரில் அரை டீஸ்பூன் உப்பு சேர்த்து புளியை ஊற வைக்கவும். கடாயில் நெய், நல்லெண்ணெய் விட்டு, பாதியளவு அன்னாசிப்பூ, ஏலக்காய், லவங்கம் பொரித்துக் கொள்ளவும். அதே கடாயில் காய்ந்த மிளகாய், தனியா, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், ஒரு டேபிள்ஸ்பூன் வேர்கடலை, ஒரு டீஸ்பூன் சீரகத்தை ஒன்றன்பின் ஒன்றாகச் சேர்த்து சிவக்க வறுக்கவும்.

கடைசியாக, கறிவேப்பிலை, பெருங்காயம் சேர்த்து இறக்கவும். அவற்றுடன் பாதியளவு வெங்காயம், பாதியளவு தேங்காய் துருவல் சேர்த்து நைஸாக அரைத்தால் மசாலா தயார். அடி கனமான பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் விட்டு துவரம்பருப்பை வேக விடவும். பாதி வெந்ததும், அரிசியைச் சேர்த்து, கொதிக்கும்போதே வெங்காயம் தவிர மற்ற காய்கறிகளைச் சேர்த்து கொதிக்க விடவும்.

புளிக் கரைசலுடன் மஞ்சள்தூள், வெல்லம், பெருங்காயம், கறிவேப்பிலை, சிறிது உப்பு, அரைத்த மசாலா சேர்த்து, பச்சை வாசனை போகும் வரை கொதிக்க விடவும். பிறகு மீதமிருக்கும் வெங்காயத்தை வதக்கி அதில் சேர்த்து, நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கவும். குழைய வெந்திருக்கும் சாதம், பருப்பு, காய்கறிக் கலவையில் இக்குழம்பை ஊற்றி ஒரு கொதி வந்ததும் கிளறி இறக்கவும்.

மீதமிருக்கும் லவங்கம், அன்னாசிப் பூ பொடித்து அதில் கலக்கவும். மீதமுள்ள நெய், நல்லெண்ணையை கடாயில் விட்டு, தனியே எடுத்து வைத்த சீரகம், வேர்க்கடலை, தேங்காய் துருவல், கறிவேப்பிலை, பெருங்காயம் தாளித்து சாதத்துடன் கொட்டிக் கலக்கவும்.

Tags :
|