Advertisement

தக்காளி இல்லாமல் புளி ஊற்றிய வெங்காய சட்னி செஞ்சு பாருங்க

By: vaithegi Wed, 26 July 2023 3:31:06 PM

தக்காளி இல்லாமல் புளி ஊற்றிய வெங்காய சட்னி செஞ்சு பாருங்க


தக்காளி சேர்க்காமல் புளி தண்ணீர் ஊற்றி வெங்காயத்தை நன்கு வறுத்து அரைக்கக் கூடிய இந்த சட்னி வறுத்த வெங்காய சட்னி எனலாம். இந்த வெங்காய சட்னிக்கு 10 இட்லி கொடுத்தால் கூட பத்தவே பத்தாது, சாப்பிட்டுகிட்டே இருக்கணும்னு தோணும். அந்த அளவிற்கு ருசியான இந்த சட்னி

வெங்காய சட்னி செய்ய தேவையான பொருட்கள்:

பெரிய வெங்காயம் – 2, உளுத்தம் பருப்பு – 3 ஸ்பூன், சமையல் எண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன், வரமிளகாய் – 10, கருவேப்பிலை – 2 கொத்து, தேங்காய் துருவல் – அரை கப், புளி தண்ணீர் – கால் கப், உப்பு – தேவைக்கான அளவு. தாளிக்க: சமையல் எண்ணெய் – 1 டீஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், கருவேப்பிலை – 1 கொத்து.

செய்முறை:
இந்த வெங்காய சட்னி செய்வதற்கு முதலில் தேவையான எல்லா பொருட்களையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். 2 பெரிய வெங்காயத்தை தோலுரித்து நீளவாக்கில் நான்கைந்து துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள். அதன் பின்னர் அடுப்பில் வாணலி ஒன்றை வையுங்கள். அதில் 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு எண்ணெய் விட்டு காய விடுங்கள்.

எண்ணெய் காய்ந்ததும் உளுந்து சேர்த்து பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். உளுந்து சிவக்க வறுபட்டு வரும் சமயத்தில் உங்கள் காரத்திற்கு ஏற்ப வர மிளகாய்களை காம்பு நீக்கி சேர்த்து வறுத்துக் கொள்ளுங்கள். அரை நிமிடம் வறுத்த பின்பு 2 கொத்து கறிவேப்பிலையை உருவி போட்டுக் கொள்ளுங்கள். இதனுடன் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து நிறம் மாற நன்கு வதக்க வேண்டும்.

onion chutney,tomato ,வெங்காய சட்னி,தக்காளி

வெங்காயம் நிறம் மாறியதும் துருவி வைத்துள்ள தேங்காய் துருவலை சேர்த்து கலந்து விடுங்கள். கடைசியாக புளி தண்ணீர் சேர்த்து ஒரு முறை நன்கு கலந்து விட்ட பின்பு அடுப்பை அணைத்து ஆற விட்டு விடுங்கள். இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஆறிய பொருட்களை சேர்த்து தேவையான அளவிற்கு உப்பு போட்டு நைசாக பேஸ்ட் போல அரைத்து எடுத்துக் கொண்டு வாருங்கள். அரைத்து எடுத்த இந்த சட்னிக்கு ஒரு சிறு தாளிப்பு கொடுக்க வேண்டும்.

தாளிக்க தாளிப்பு கரண்டி ஒன்றை அடுப்பில் வைத்து 1 ஸ்பூன் எண்ணெய் விட்டு காய விடுங்கள். எண்ணெய் காய்ந்ததும் கடுகு போட்டு பொரிய விடுங்கள். கடுகு பொரிந்து வந்ததும் 1 கொத்து கருவேப்பிலையை உருவி போட்டு தாளித்து சட்னியுடன் சேர்த்து கலந்து விட்டால் ருசியான வறுத்த வெங்காய சட்னி ரெடி.

Tags :